வசந்தவிடமிருந்து மக்களுக்கு ஒரு கடிதம் !

அன்புள்ள தாய்,தந்தயரே சகோதர சகோதரிகளே ! 

2022 முடிந்து ஒரு புதிய ஆண்டு உதயமாகியுள்ளது . உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக இருக்கும்போது, பொருளாதாரக் குற்றங்களைச் செய்து, மக்களைக் கொன்று, கொலைக் கலாச்சாரத்தைப் பேணிய உண்மையான பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்ததற்காக நான் 140 நாட்களாக சிறையிலடைக்க பட்டுள்ளேன் . நான் மட்டுமல்ல,  வளமான சமுதாயத்திற்காகப் போராடியவர்களும், பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கோரி போராடியவர்களும் சிறையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும், அரசாங்கத்தின் அடக்குமுறையினால் அவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாகச் செய்வதற்கு சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது  என்பதை நான் அறிவேன்.

சுவரில் இருந்து கலெண்டரை அகற்றுவது போல் 2022 ஆம் ஆண்டை வரலாற்றில் இருந்து அகற்ற முடியாது. ஏனென்றால் நாங்கள் கற்றுக்கொண்ட வருடம் அது. மக்கள் சக்தியைப் பற்றி மக்கள் கற்றுக்கொண்ட ஆண்டு. முடியாது என்று எண்ணிய, முடியாது என்று சொன்னப் பல காரியங்களை மக்களின் ஒற்றுமை மூலம் சாதிக்க முடியும் என்பது நிரூபணமான ஆண்டு. 2022 ஆண்டை நாம் வெறுமனே கடந்துவிடவில்லை. அதேபோல் 2023 ஆண்டும் சாதாரணமாக தொடங்கவில்லை. கடந்த ஆண்டின் பல வரலாற்று சாதனைகளின் உத்வேகத்துடன் புதிய ஆண்டு தொடங்குகிறது.

மக்களாகிய நாம் எமது வாழ்நாளில் சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். நாடு திவாலாகியுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்புகளும் தகர்த்தெறியப்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களுக்கு என்ன நடக்கப் போகிறது, என்ன செய்வது என்று புரியாத அளவுக்கு வாழ்க்கையின் கனவுகள் சிதைந்துவிட்டன. தினக்கூலித் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது வருமான ஆதாரங்களை இழந்துள்ளனர். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மீனவர்களால் வாழ்வை கொண்டுச்செல்ல முடியாத நிலையில் உள்ளனர் . அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கிடைக்கும் ஊதியத்தில் வாழ முடியாத நிலை உள்ளது. இன்னொரு விடயம் என்னவென்றால், முன்பு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்பிய நடுத்தர வர்க்க மக்கள் கூட நெருக்கடியின் முன் தமது வாழ்வை இழந்துள்ளனர். உண்மையில், நடுத்தர வர்க்கம் ஒழிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நெரருக்கடி , ஒரு வரையறுக்கப்பட்ட மேல் வரக்கம் மட்டுமே வளமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலை சமூகத்தை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சில அரசியல் தலைவர்களும்,தனியார் நிறுவனங்களும் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் .லாபத்தை ஈட்டி தங்களை வளர்த்துக்கொண்டுள்ளனர் 

நல்ல சுகாதாரம் மற்றும் போக்குவரத்துக்கு ஒதுக்க பணம் இல்லை. அரசாங்கத்தைப் பொருத்தவரை, ஆட்சியாளர்கள் திருடியது அல்ல பிரச்சினை. நலிந்தவர்கள் கற்றுக்கொள்வதுதான் தவறு. மக்கள் நோய்வாய்ப்படுவதே தவறு. இங்கு தண்டிக்கப்படுவது கொள்ளையர்கள் அல்ல, மாறாக பாதிக்கப்பட்டவர்கள்தான். இன்று இந்த நாடு பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களை வாங்க முடியாமல் தாய்மார்கள் தற்கொலை செய்யும் நாடாக மாறியுள்ளது. கொடிய சிறுநீரக நோய், இதய நோய், புற்றுநோய் என்று தெரிந்தும் மருந்து வாங்கக் கூட பணமில்லாமல் சாகக் காத்திருக்கும் நாடாக இது மாறிவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதைப் பெற்றோர் பார்க்கும் நாடாக இது மாறிவிட்டது. விடுதிக் கட்டணம் செலுத்த முடியாமல் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை கைவிடும் நாடாக இந்த நாடு மாறியுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது. மக்கள் போராட்டத்திற்கு முன்னரே அது நிரூபிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட வெல்ல முடியாத ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக முடியும் என்பதே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மோசடித் தன்மைக்கு சிறந்த உதாரணம்: இதைவிட என்ன நல்ல உதாரணம்  சொல்லிவிட முடியும்? ரணிலைப் போன்ற தோற்றுப்போனவர் பதுங்கியிருந்து ஜனாதிபதி நாற்காலியில் அமரக்கூடிய அளவுக்கு நுண்துளைகள் கொண்ட இந்த அரசின் அரசியலமைப்பு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதையே இது உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வளவு காலம் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களும் அரசியல்அமைப்பும், அந்த அமைப்பை பேணி வந்த ஆட்சியாளர்களும் உருவாக்கிய பொருளாதார, அரசியல் நெருக்கடி படிப்படியாக வளர்ந்து இன்று இந்த நிலைக்கு எம்மைக் கொண்டுவந்துள்ளது. எனவே, இந்த நெருக்கடிக்கு மக்கள் பொறுப்பேற்கக் கூடாது. மக்கள் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நாட்டுக்காக தங்களால் இயன்றதைச் செய்தார்கள். மக்கள் அதைச் செய்யும்போது, ஆட்சியாளர்கள் மக்களின் உடைமைகளை இயன்றவரை திருடுகிறார்கள். இதனாலேயே தற்போதுள்ள பாரம்பரிய அரசியலமைப்பை மக்கள் நிராகரித்து.மக்கள்  போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். நிற, கட்சி, இன, மத வேறுபாடின்றி நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்ட போராட்டமே இலங்கையின் அரசியலில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற மாயைக்குப் பதிலாக மக்கள் சக்தியை பிரயோகிக்கும் வாய்ப்பை இந்தப் போராட்டம் மக்களுக்கு வழங்கியது.

எனவே, இந்தப் போராட்டத்தின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகள் வென்றேடுக்கப்பட்டது, இனியும் வென்றெடுக்கப்பட வேண்டும். போராட்டம் பற்றி மக்கள் என்ன சொன்னார்கள்? எங்களிடம் இருந்து திருடிய பணத்தை எங்களுக்கு தருமாறு ஆட்சியாளர்களிடம் சொல்லுங்கள்,  நிறுவனங்கள் செலுத்தாத வரிகள், வரி ஏய்ப்புக்கு நியாயம் கேட்டார்கள். திருப்பிச் செலுத்தாத கடன்களை மீள்ப்பெருமாறு வாங்கிகளை கேட்டனர். 2020ஆம் ஆண்டில் மட்டும் 1050 கோடி வங்கிக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை. அவற்றை மீளப் பெறுமாறு கேட்டனர்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரம், கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கும் புதிய அரசியலமைப்பு என்பவற்றை வேண்டினார்கள்.

 மேலும் பின்வரும் விடயங்களை மக்கள் போராட்டத்தில் இருந்து எதிர்ப்பார்த்தனர் 

 1. பொருளாதார சமத்துவம் கொண்ட சமூகம் 

  2. மக்களை நேரடியாக நிர்வாகத்தில் ஈடுபடுத்தும் ஜனநாயக சீர்திருத்தங்கள்.

 3. சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை.

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை இன்னும் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. கோத்தபய ராஜபக்ச அனுப்பப்பட்ட பின்னர், அரசியலமைப்பு சதிகளை செய்து ரணில் ஜனாதிபதியானார். இப்போது ரணில்-ராஜபக்ஷ ஆட்சிக்குழு அதே பழைய வேலையை இன்னும் வேகமாகச் செய்கிறது. மக்களிடம் வரி விதிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வரிக் கோப்பைத் திறக்கப் போகிறார்கள். 100,000,000 மாதச் சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்களில் பெரும் பகுதியினர் சுரண்டப்பட போகிறார்கள். பெரிய அளவிலான நிறுவனங்கள் கோடிக்கணக்கான வரிப்பணத்தை ஏய்த்த போது இது செய்யப்படவில்லை . மின் கட்டணம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் அதே அளவு மின் கட்டணம் அதிகரிக்கப்பட போகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இன்று ஒரு வேலையேனும்  சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் எதிர்காலத்தில் பட்டினியால் சாவார்கள். கோடிக்கணக்கான ஏற்றுமதி வருமானம் நாட்டிற்கு வெளியே மறைக்கப்படும்போது, பெண்டோரா பேப்பர்களில் வெளிப்பட்ட கோடிக்கணக்கான திருடப்பட்ட பணம் நாட்டை விட்டு வெளியில் அனுப்பபட்டுள்ள போது, பெறுநிறுவனங்கள் வரி மோசடியும் , வங்கிக்கடன் மோசடியும் செய்துள்ளப்போது, ஈவிறக்கம் இல்லாமல் அனைத்து நெருக்கடியும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற உரிமைகள் கூட பண்டமாக விற்கப்படுகின்றன. மக்களின் பொதுச் சொத்துக்கள் விற்கப்படுகின்றன.

தங்களின் இயலாமையை மறைக்க, போராட்டத்தின் மீது பெரும் அவதூறு பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்துள்ளது. அரசுக்கெதிரான போராட்டத்தில் வேண்டுமென்றோ, தெரியாமலோ தலைமைத்துவம் இல்லாத, போராட்டத்திற்கு எந்த திட்டமும் இல்லாத, எந்த நோக்கமும் இல்லாத பிரிவினர் மற்ற பிரிவினரை அவதூறாகப் பேசத் தொடங்கியுள்ளனர். எனவே இந்த அவதூறு பிரச்சாரத்தை அனுமதிக்க வேண்டாம் என்று மக்களுக்கு சொல்கிறோம். நம் நாட்டின் வரலாற்றில் நாம் அனைவரும் இணைந்து நடத்திய வெற்றிகரமான போராட்டம் இதுவாகும். ஆனால் இது போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. இன்னும் முடியவில்லை. இறுதி வெற்றி வரை போராட்டம் பரவாமல் தடுக்க ஆட்சியாளர்கள் விரும்பினர். ஆரம்பத்திலேயே போராட்டம் பல வெற்றிகளை இந்த சமுதாயத்திற்கு பெற்றுத்தந்தது.

1. அரசுகளை நியமிக்கவும், அரசுகளை வீட்டுக்கு அனுப்பவும் கூடிய மக்கள் சக்தியின் மீது இப்போராட்டம் நம்பிக்கை ஏற்படுத்தியது.

 2. பாராளுமன்றம் போன்ற அமைப்புகளுக்கு வெளியே பொது அதிகாரத்தை சோதனை செய்யும் முறைகள் பற்றிய அனுபவத்தை போராட்டம் இந்த சமூகத்திற்கு வழங்கியது.

 3. என்றென்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று கனவு கண்ட ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை முறியடிப்பதில் போராட்டம் வெற்றி பெற்றது

. 4. இனவாதம், மதவாதம் போன்ற தீய எண்ணங்களைப் பயன்படுத்தி பேணப்பட்ட அரசியல் பாரம்பரியத்தை தோற்கடிக்க முடிந்தது.

போராட்டம் நமக்குக் கொடுத்த அடிப்படைச் சாதனைகள் இவை. இந்த வரலாற்றுச் சாதனைகளின் அடித்தளத்துடன் தான் 2022ஆம் ஆண்டு முடிவடைந்து 2023ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கிறது. அந்த அனுபவத்துடன் இறுதி வெற்றி வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த செய்தியுடன் 2023 ஆம் ஆண்டு உதயமாகிறது. எனவே, எனது நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் வாழ்வுரிமைக்காக மக்கள் போராட்டத்தைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசின் அடக்குமுறை மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு முன் மண்டியிடாதீர்கள். நிபந்தனையின்றி, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வீதிக்கு வாருங்கள். எம் வாழ்விற்காக போராடுவோம். வருங்கால சந்ததியினருக்காக போராடுவோம். அதற்காக மாணவர் இயக்கம் என்ற வகையில் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

போராட்டத்திற்கு வெற்றி உண்டாக்கட்டும்!!!

01.01.2023

கொழும்பு விளக்கமறியலில் இருந்து,

வசந்த முதலிகே,

அழைப்பாளர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்